சமீபத்தில் 2021ஆம் வருடத்திற்கான 69 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் அதிக அளவில் ஆறு பிரிவுகளின் விருதுகளை வென்றுள்ளது. தமிழ் திரையுலகமும் கணிசமான விருதுகளை அள்ளியுள்ளது
விருது பெற்றவர்களுக்கு ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் விருது பெற்ற அனைவரையுமே தனித்தனியாக பாராட்டி மிக நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது கடைசி விவசாயி படத்திற்கும் அதில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு என் அன்பும் பாராட்டும்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு நடிகர் எனும் புதிய சரித்திரத்தை படைத்திருக்கும் அல்லு அர்ஜுன், சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.மாதவன் மற்றும் குழுவினர், பல பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் குழுவினர், புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசை பிரிவில் விருது பெற்ற தேவிஸ்ரீ பிரசாத், இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக சிறந்த பாடகி விருது பெற்ற ஸ்ரேயா கோஷல், சிறந்த கல்வி திரைப்படம் பிரிவில் சிற்பங்களின் சிற்பங்கள் படத்தை இயக்கிய விருது வென்றுள்ள இயக்குனர் பி லெனின், கருவறை ஆவணப்படுத்திக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தென்னிந்திய சினிமா உள்ளடக்கத்திலும் தொழில்நுட்பத்திலும் பல உச்சங்களை எட்டியதன் அடையாளம் தேசிய விருதுகளின் பட்டியலில். எதிரொலிக்கிறது. இந்த வெற்றி தொடரட்டும்” என்று கூறியுள்ளார்