தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ், தனது 50-வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். குறிப்பாக பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சரவணன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் தனது அறிமுக காலகட்டங்களில் மிகுந்த உருவகேலிக்கு ஆளான நடிகர்களில் தனுஷும் ஒருவர். தன்மீது வீசப்பட்ட மிகவும் தவறான, அவமரியாதையான விமர்சனங்களை எல்லாம் தாண்டி இன்று தமிழ் சினிமாவின் அடையாள முகங்களில் ஒன்றாக மாறியுள்ளார். ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என பன்மொழி திரையுலகிலும் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகின்றார். தான் நடிக்கும் சினிமாக்களில் தனது நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து வரும் அதேநேரத்தில் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்தும் வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் மாபெரும் வெற்றிப் படமாக மாறவில்லை. அதேநேரத்தில் தோல்விப் படமாகவும் மாறவில்லை. மேலும் கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தனுஷ் நடிக்கவுள்ள ‘இசைஞானி’ இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தினையும் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இளையாராஜாவே இசையமைக்கின்றார். தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ராயன் திரைப்படம், முழுக்க முழுக்க ‘கேங்ஸ்டர்’ திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எனப்படும் எஸ்.ஜே. சூர்யா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலஷ்மி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் ‘நடிப்பு அசுரன்’ தனுஷ், ‘நடிப்பு அரக்கன்’ எஸ்.ஜே.சூர்யா மற்றும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ராயன் திரைப்படம் 26/07/2024-அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு இயக்குனர் அவதாரத்தை இந்தப் படத்தின் மூலம் மீண்டும் எடுத்துள்ளார் தனுஷ். வடசென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் ராயன் படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது!