V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் சரண்ராஜ் இயக்கும் குப்பன் படத்தில் இசையமைப்பாளராக  அறிமுகமாகும் ஜூனியர் இளையராஜா 

நடிகர் சரண்ராஜ் இயக்கும் குப்பன் படத்தில் இசையமைப்பாளராக  அறிமுகமாகும் ஜூனியர் இளையராஜா 

எண்பதுகளில் மிரட்டல் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சரண்ராஜ். அதன் பிறகு தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் வில்லனாக, அவரது நண்பனாக  என  தவறாமல் நடித்து  இன்னும் அதிக அளவு ரசிகர்களிடம் பிரபலமானார்.

கிட்டத்தட்ட 600  படங்கள் வரை நடித்துள்ள சரண்ராஜ் தற்போது தனது மகன் தேவ் சரண்ராஜ்  கதாநாயகனாக அறிமுகமாகும் குப்பன் என்கிற படத்தை  இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக எஸ்.ஜி.இளை என்கிற இசையமைப்பாளரை  அறிமுகப்படுத்தியுள்ளார் சரண்ராஜ்.

இந்த படத்தில் தான் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து இசையமைப்பாளர் எஸ்,ஜி. இளை கூறும்போது, “எங்களது  குடும்பமே இசைக்குடும்பம் தான். எனது அம்மாவுடன் பிறந்த ஐந்து சகோதரர்களுமே இசைத்தறையில் தான் இருக்கிறார்கள். அவர்களில் இசைவாணன் என்பவர் அஜித் நடித்த மைனர் மாப்பிள்ளை படத்திற்கு இசையமைத்தவர்.  அதேபோல என்னுடன்  பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். எங்கள் ஐந்து பேரையும் தனது ஐந்து சகோதரர்களிடம் ஒப்படைத்து இசை கற்றுக்கொள்ள செய்தார்  எனது அம்மா.  அப்படித்தான் ஒவ்வொருவரும் ட்ரம்ஸ், கிட்டார், கீபோர்டு  என கற்றுக் கொண்டோம்.

இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்கும்போது இந்தப் படம் ஒரு புதுமையான கான்செப்ட்டில்  உருவாகி இருப்பதை  கண்டு  ஆச்சரியப்பட்டேன். அதுமட்டுமல்ல ஒரு மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்குமான காதலை  இதில் எடுத்துச் சென்ற விதம் புதிதாக இருந்தது.

இசையில் எனக்கு தூண்டுதலாக இருந்தவர் என்றால் இசைஞானி இளையராஜா தான். என்னுடைய பேவரைட் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.. எனது பெயரும் இளையராஜா என்று இருந்தாலும் ஏற்கனவே அதே பெயரில் நம் இசைஞானி இருப்பதால் எனக்கும் ஒரு தனித்துவம் கிடைக்க வேண்டும் என்பதால்  என் தாய் தந்தை இருவரின் பெயரையும் முதல் எழுத்துக்களாக சேர்த்து எஸ்.ஜி.இளை என பெயரை மாற்றிக் கொண்டேன். அப்படி மாற்றிய நான்கே மாதத்தில்  குப்பன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. குப்பன் படத்தின் பாடல்களை கேட்டுவிட்டு இன்னும் இரண்டு படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துள்ளது” என்கிறார்

Most Popular

Recent Comments