சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக பெங்களூர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றியவர் என்பது உலகறிந்த செய்தி. அங்கே தான் தனது ஆத்மார்த்தமான நண்பர்களையும் அவர் பெற்றார். அப்படி பெற்ற நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தாலும் உதவியாலும் தான் அவர் சென்னைக்கு வந்து சினிமாவில் நுழைந்து நடிக்க துவங்கினார்.
மிகப்பெரிய அளவில் பிரபலமாகி கடந்த 40 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 600 கோடி அளவில் வசூலித்து இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் வசூலில் நம்பர் ஒன் என பறைசாற்றியுள்ளது.
இந்த படம் வெளியாவதற்கு முன்பாக இமயமலை சுற்றுப்பயணம் சென்று திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். அங்கே தான் ஆரம்ப காலத்தில் பணிபுரிந்த பிஎம்டிசி எனப்படும் பெங்களூரு அரசு போக்குவரத்து கழக டிப்போவிற்கு திடீர் விசிட் அடித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் திடீர் வருகையால் அங்கிருந்த ஊழியர்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அங்கு இருந்தவர்களுடன் பேசி தனது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை மகிழ்வித்தார். எப்போதும் பழசை மறக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதை இப்போதும் அவர் நிரூபித்துள்ளார்.