V4UMEDIA
HomeNewsKollywoodஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் ; ஜெயிலரின் மகன் நெகிழ்ச்சி

ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் ; ஜெயிலரின் மகன் நெகிழ்ச்சி

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. திரையிட்ட பக்கமெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது இந்த ஜெயிலர் திரைப்படம்.

இந்தப் படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மட்டுமல்ல இயக்குனர் நெல்சனுக்கும் மீண்டும் ஒரு கம் பேக் படமாக அமைந்துவிட்டது. அது மட்டுமல்ல இந்த படத்தில் நடித்துள்ள பல நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய வெளிச்சமும் கிடைத்துள்ளது. அப்படி இதுநாள் வரை சில படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த வசந்த் ரவி என்கிற ஒரு நடிகரை இந்த படம் இன்னும் அதிகம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் வசந்த் ரவி. இதற்கு முன்பு தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ஒரு கதாநாயகனாக ஓரளவுக்கு ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக இருந்த இவரை, இன்று ஜெயிலர் படம் ரஜினியின் மகனாக பட்டி தொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்து விட்டது.  இதனால் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார் வசந்த் ரவி.

இந்தப் படம் குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள வசந்த் ரவி கூறும்போது, “அனுபவங்கள் நிறைந்த ஆறு வருட பயணம், சினிமா துறையில் எனக்கு வழிகாட்டியாக இருந்தது. இயக்குநர் ராம் சார் என்னை பிரபுநாத் என்று அறிமுகப்படுத்திய ஆகஸ்ட் 11, 2017 அன்று “தரமணி” திரைப்படத்தில் நான் அறிமுகமானதிலிருந்து, இன்று வரை, ஆகஸ்ட் 10, 2023 அன்று, நடிகர் ரஜினிகாந்த் சாரின் மகன் அர்ஜுன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் அடியெடுத்து வைக்கிறேன்.. பிரபஞ்சத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது நான் எப்பொழுதும் உங்களை “சார்” என்று அழைத்தாலும், இன்று உங்களை “அப்பா” என்று அழைப்பதை ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன். ரஜினி பா.. ரீல் மற்றும் நிஜ வாழ்க்கையில் என் ரத்தமாரே…. “நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா, நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தீர்கள்” என்று நெகிழ்ந்து போய் கூறியுள்ளார் வசந்த் ரவி.

Most Popular

Recent Comments