Home News Kollywood செப்டம்பர் 1 முதல் லக்கிமேனாக மாறும் யோகிபாபு

செப்டம்பர் 1 முதல் லக்கிமேனாக மாறும் யோகிபாபு

சந்தேகமே இல்லாமல் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து வருபவர் நடிகர் யோகிபாபு. பல பெரிய படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார் யோகிபாபு.

அந்த வகையில் தர்ம பிரபு, மண்டேலா, பொம்மை நாயகி என அவர் கதையின் நாயகனாக நடித்த படங்கள் எல்லாமே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் லக்கி மேன். இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஆர்.ஜேவாக இருந்து நடிகராக மாறிய பாலாஜி வேணுகோபால் இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கடைசி விவசாயி படத்தில் நடித்த ரேச்சல் ரெபேக்கா நடித்துள்ளார்.

இந்த படம் வெளியாகும் தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள யோகிபாபு கூறும்போது, “லக்கிமேன் செப்டம்பர் 1ஆம் தேதி உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு குடும்பப் பாங்கான நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த பொழுதுபோக்கான படம்” என்று கூறியுள்ளார்.