V4UMEDIA
HomeReviewபொம்மை நாயகி ; விமர்சனம்

பொம்மை நாயகி ; விமர்சனம்

கடலூர் நகரத்தில் ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்ப்பவர் யோகிபாபு. அவரது மனைவி சுபத்ரா, பள்ளி செல்லும் அழகான சிறுமியாக மகள் ஸ்ரீமதி, தந்தை ஜிஎம் குமார் மற்றும் தாயார் என அழகாக போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

இவரது அண்ணன் அருள்தாஸ்.. தனது தந்தையின் மூத்த மனைவியின் மகன்.. உயர் சாதியில் பிறந்தவர். இருந்தாலும் யோகி பாபு அண்ணன் மீது பாசத்துடன் இருக்கிறார். அண்ணனோ இவர் மீது பட்டும் படாமல் பாசம் காட்டுகிறார். திடீரென ஒரு நாள் எதிர்பாராத விதமாக யோகிபாபுவின் மகள் சில கயவர்களால் பாலியல் பலாத்கார முயற்சிக்கு ஆளாகிறார். தக்க நேரத்தில் அவரை காப்பாற்றி சிகிச்சை அளித்து மீட்கும் யோகிபாபு போலீஸில் புகார் அளிக்க செல்கிறார். ஆனால் அதன்பின் அண்ணன் கொடுத்த ஆலோசனைப்படி பிரச்சனையை பெரிது பண்ணாமல் விட்டுவிட நினைக்கிறார்.

ஆனால் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் அளவுக்கு துணிந்து விட்டாயா என ஒரு கட்டத்தில் தப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக எல்லோரும்  சேர்ந்து தன்னை ஏதோ குற்றவாளி போல மாற்ற முயற்சிப்பதை கண்டு பொங்கி எழுந்து சமூக ஆர்வலரான மெட்ராஸ் ஜானி மூலமாக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறுகிறார்.

அண்ணன் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்த மனிதர்களிடமிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதையும் தாண்டி யோகிபாபுவுக்கு நீதி கிடைத்ததா என்பதுடன் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் யோகிபாபுவின் வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பதையும் மீதி படம் விளக்குகிறது.

வேலுவாக யோகி பாபு, தன்னால் கனமான பாத்திரங்களை தாங்க முடியும் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். படம் முழுவதும் எங்குமே அவர் சிரிக்கவில்லை. ஒரு பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார்.

சீரியஸான கதை என்பதால் எல்லா இடங்களிலும் அழுது வடியாமல் இருப்பது நன்று. யோகிபாபுவின் மனைவியாக சுபத்ரா. கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்.

மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். யோகிபாபுவுக்கும் இவருக்குமான பிணைப்பு திரையில் ரசிக்க வைக்கிறது. அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நீதிமன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முடியுமே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை உணர வைத்துள்ளார் இயக்குனர்.

சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் சாதகமான இருக்கிறது என்பதையும் சொல்லியுள்ளார். படத்தில் வரும் வசனங்கள் கள யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகின்றன.

பொம்மை நாயகின்னு சாமி பேர வெச்சுட்டு, ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற, தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன், போற உயிரு போராடியே போகட்டும் சார் போன்ற வசனங்கள் அருமை. உயர் சாதியினர் தப்பு செய்தால் சொந்தமும் சட்டமும் அவர்கள் பக்கமே இருக்கும் என்பதையும் இயக்குனர் பதிவு செய்துள்ளார்.

பா.ரஞ்சித் தயாரிப்பாளர் என்றாலே நம்பி திரையரங்குகளுக்கு போகலாம் என்பதை பொம்மை நாயகியும் உறுதி செய்துள்ளது. யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜிஎன் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, கேலப், நடித்திருக்கிறார்கள். யோகிபாபுவின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரீமதி என அனைவரின் நடிப்பும் அருமை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதே போன்று சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளான படம் ஒன்று வெளியாகி சிறுமிக்கு நீதி கிடைப்பது போல முடித்திருந்தார்கள். இந்தப் படமும் அப்படி முடிந்து இருந்தால் ஒரு சாதாரண படமாக இருந்திருக்கும்.

ஆனால் அப்படி ஒரு தீர்ப்புக்குப் பிறகும் அந்த குடும்பத்தால் நிம்மதியாக வாழ முடிந்ததா, அதற்கடுத்து நிரந்தரமான நீதி கிடைக்க அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை கையில் எடுக்க வேண்டி இருப்பதை காட்டியதன் மூலம் இந்த பொம்மை நாயகி வித்தியாசமாக தனித்து நிற்கிறார்.

நிச்சயமாக மனதை நெகிழ வைக்கும் ஒரு படம் என்பதில் சந்தேகமே இல்லை

Most Popular

Recent Comments