HomeReviewரன் பேபி ரன் ; விமர்சனம்

ரன் பேபி ரன் ; விமர்சனம்

வங்கி ஒன்றில் பணிபுரியும் ஆர்ஜே பாலாஜிக்கு இஷா தல்வாருடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இந்த நிலையில் அவரது காரில் அவருக்கே தெரியாமல் எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக நுழைந்து கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .ஆர் ஜே பாலாஜியின் வீடு வரை வரும் அவர், தான் எதிரிகளிடம் சிக்கி உள்ளதாக கூறி சிறிது நேரம் மட்டும் அவரது அபார்ட்மெண்டில் தங்கி விட்டு செல்வதாக கூற, வேறு வழி என்று அரை மனதுடன் சம்மதிக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

தனது வீட்டில் இன்னொரு அறையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்க, தன்னுடைய அறையில் தன்னை மறந்து படுத்து உறங்கி விடுகிறார் ஆர்ஜே பாலாஜி. எழுந்து பார்த்தால் பக்கத்து அறையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அதுமட்டுமல்ல அவரது வாட்ஸ் அப்புக்கு ஐஸ்வர்யா ராஜேஷுடன் அவர் ஒன்றாக படுத்திருப்பது போன்ற புகைப்படமும் வருகிறது.

யாரோ திட்டமிட்டு தன்னை வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஆர்ஜே பாலாஜி தனது போலீஸ் நண்பனான விவேக் பிரசன்னாவின் ஆலோசனைப்படி ஐஸ்வர்யா ராஜேஷின் உடலை அப்புறப்படுத்துவதற்காக பல இக்கட்டான சூழலைத் தாண்டி வெளியே கொண்டு செல்கிறார்.

அவரால் அதை சாமர்த்தியமாக செய்ய முடிந்ததா ? அப்படி அவர் இறங்கிய காரியத்தில் வேறு ஏதேனும் எதிர்பாராத பிரச்சினைகள் வந்ததா ? உண்மையான கொலையாளி யார் ? எதற்காக ஆர்ஜே பாலாஜியை குறி வைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ஒரு கட்டத்தில் அவரே களத்தில் இறங்குகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

படம் படம் துவங்கியதில் இருந்து இடைவேளை வரை அடுத்து என்ன நடக்குமோ என நம் இதயத்தை துடிக்க வைக்கும் விதமாக விறுவிறுப்பாகவே நகர்கிறது. அதில் எந்த குறையும் இல்லை. ஒரு நாவலுக்கு உண்டான வேகம் இதில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நாமே ஆர்.ஜே பாலாஜியாக மாறி அந்த பிரச்சினையில் சிக்கிக்கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்துவது இந்த படத்தின் வெற்றி.

அதே சமயம் ஆர் ஜே பாலாஜி என்றாலே நகைச்சுவையாக பார்த்து பழகிவிட்ட நமக்கு இதில் படம் முழுக்க அவரது சீரியஸ் முகத்தை பார்ப்பது ஒரு கட்டத்தில் போரடிக்கவும் செய்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

கதையின் நாயகியாக மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் வெகு சாதாரண காட்சிகளில், இலையில் வைக்கப்பட்ட ஊறுகாய் போல கொஞ்ச நேரமே மட்டுமே வந்து போகிறார். இதில் அவர் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

இவராவது பரவாயில்லை இன்னும் இரண்டு நாயகிகளான இஷா தல்வார் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இருவரும் சில காட்சிகள் மட்டும் தலைகாட்டி விட்டு செல்கிறார்கள். கல்லூரி பேராசிரியராக கிளைமாக்ஸில் வந்து திருப்பம் கொடுக்கிறார் ஜோ மல்லூரி.

நாளுக்கு நாள் நடிப்பு திறமையை மெருகேற்றி வரும் விவேக் பிரசன்னா இந்த படத்திலும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இன்னும் கூட அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படாமல் இல்லை.

ஒரு படத்திற்கு மிகப்பெரிய வெற்றி என்பது அந்த கதையில் நம்மை அறியாமலேயே உள்ளே இழுக்கப்பட்டு கதையுடன் பயணிக்க வைப்பது தான்.. இடைவேளை வரை அதை சரியாக செய்த இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமார் இடைவேளைக்கு பின் அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் சிதறி இருக்கிறார்.

இருந்தாலும் த்ரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் போதுமான திருப்தியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments