V4UMEDIA
HomeNewsKollywoodஅழகான காதல் கதையை ரத்தம் சிதறும் ஆக்ஷனில் சொல்ல வரும் மைக்கேல்

அழகான காதல் கதையை ரத்தம் சிதறும் ஆக்ஷனில் சொல்ல வரும் மைக்கேல்

எப்போதுமே மல்டி ஹீரோ படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கடந்த வருடம் வெளியான விக்ரம் படமாகட்டும் அல்லது பொன்னியின் செல்வன் படமாகட்டும் இரண்டுமே பல ஹீரோக்கள் இணைந்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்கள் என்பது சமீபத்திய சான்று. இந்தநிலையில் தற்போது நடிகர் விஜய்சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் இருவரும் இணைந்து நடித்துள்ள மைக்கேல் என்கிற திரைப்படம் அதேபோன்ற எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது.

பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், திவ்யன்ஷா கௌஷிக், வரலட்சுமி சரத்குமார், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதில் விஜய்சேதுபதி நடித்திருந்தாலும் அவர் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார் என்பதால் இதன் கதாநாயகன் சந்திப் கிஷன் என்று உறுதியாக சொல்லலாம். சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

கதையின் நாயகனான சந்தீப் கிஷனின் தோற்றம், அவரது நடிப்பு, சண்டை காட்சிகள், கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட கடும் உழைப்பு… ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. முன்னோட்டத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும், பின்னணியையும் விளக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.

குறிப்பாக காதலிக்கும் பெண்களைப் பற்றி கௌதம் மேனன் எச்சரிக்கும் வசனங்களும், அதற்கு சந்தீப் கிஷன் பதிலளிக்கும் வசனங்களும் உணர்வுபூர்வமாகவும், வலிமையானதாகவும் இடம் பிடித்திருக்கிறது. கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை திவ்யன்ஷா கௌஷிக்கின் திரை தோன்றல் ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்திருக்கிறது.

மேலும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மிரட்டும் வகையிலான தோற்றமும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. இள வயதில் தோன்றும் சந்தீப் கிஷன், ஒருவரை துப்பாக்கியால் நேருக்கு நேர் சுடுவதுடன் முன்னோட்டம் நிறைவடைகிறது. ஒரு அழகான காதல் கதையை ஸ்டைலிஷான காட்சி அமைப்புகளுடன் ரத்தம் தோய்ந்த ஆக்சன் என்டர்டெய்னர் போல் முன்னோட்டம் இருப்பதால், வழக்கமான கேங்ஸ்டர் படங்களை விட கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், பிரத்யேகமான முயற்சி எடுத்து, திரைக்கதை அமைத்து அதனை திரையில் காட்சிப்படுத்தியிருப்பதால் அவரது முயற்சி வெற்றியை தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தீப் கிஷன், காதலி மீது காட்டும் அன்பும், எதிரிகள் மீது அவர் நடந்து கொள்ளும் விதமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தை கொண்டாடி வருகிறார்கள்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் , அனுசுயா பரத்வாஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒவ்வொருவரும் வலுவான கதாபாத்திரத்தில் தோன்றுவதால், ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது

Most Popular

Recent Comments