ஜி5 தமிழ் ஓடிடி தளம் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் கொண்ட வெப் தொடர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக இந்த 2023 ஆம் ஆண்டில் அயலி என்கிற தொடரை அறிவித்துள்ளது. எட்டு தொடர்களாக வெளியாக உள்ள இந்த வெப் தொடரை இயக்குனர் முத்துக்குமார் இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் இது ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில் அபி நட்சத்திரா , அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி என முக்கிய நடிகர்களுடன் கூடுதலாக, லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்


மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும், 8 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதை தான் அயலி. அதோடு, வீரப்பண்ணை கிராமத்தில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற நடைமுறைகளை பற்றி இந்த கதை பேசுகிறது.
இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள்.
இருப்பினும், வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக்கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெறுவாளா என்பதுதான் இந்த வெப் தொடரின் கதை.
இயக்குனர் முத்துக்குமார் பேசுகையில், “இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் வெகுஜனங்களின் பார்வையை மாற்றும் கதைகளை வெற்றிகரமாக வழங்குகின்றன, மேலும் அந்த மாற்றத்தை பிரச்சாரம் போல் இல்லாமல் மக்களுக்கு கொடுக்க நாங்கள் எடுத்து இருக்கும் ஒரு உண்மையான முயற்சி தான் அயலி . இந்தத் தொடர் பெண்களின் கல்வி, அதிகாரம் மற்றும் கனவுகளை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வலிமையை கூறும் ஒரு கதையாக இருக்கும் என்று கூறுகிறார்