லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் அவருடன் விஜய் இணைந்து பணியாற்றியுள்ள படம் லியோ. கதாநாயகியாக திரிஷா, வில்லனாக சஞ்சய் தத், அர்ஜூன், இசைக்கு அனிருத் என ஒரு மாஸ் காம்பினேஷனில் இந்த படம் உருவாகி இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாவது தென்னிந்தியா முழுவதும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதே சமயம் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையுடன் காணப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழாவோ அல்லது ட்ரைலர் வெளியீடுகளோ நடைபெற விடாமல் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுவதாக ரசிகர்கள் மனக்குமுறலில் இருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தை விட ஒரு படி மேலே சென்று கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் கொண்டாட்டங்களை முழுமையாக கொண்டாடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் லியோ படத்திற்கான முதல் நாள் ரசிகர்கள் காட்சிக்கான எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்போது வரை நானூறுக்கும் குறையாமல் முதல் நாள் ரசிகர் காட்சிகள் திரையிடப்படும் என்றும் அதில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் மூலமாக மட்டுமே முதல் நாள் அன்று 1.60 கோடியை இந்த படம் கேரளாவில் வசூலித்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.