மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியானது. விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.. எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரித்து வர்மா, அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகெங்கிலும் இப்போதுவரை 100 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுடன் வெற்றிச் சந்திப்பை மார்க் ஆண்டனி குழுவினர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் படத்தின் வெற்றி குறித்து தங்களது உணர்வுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசும்போது, “நான் உருவாக்கிய ஜாக்பாட் பட டிரைலரை பார்த்துவிட்டு தான் என்னை ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தில் பணியாற்ற அழைத்தார். இந்த படத்தில் ரொம்பவே சுதந்திரம் கொடுத்தார். அதேசமயம் தனது ஐடியாக்களையும் கொடுத்தார். இந்த படத்தின் டிரைலர் இந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என்றால், அதில் அவரது ஐடியாவும் அதிகம் இருக்கிறது. நான் ஃபிலிம் மேக்கர் இல்லை, டைரக்டர் தான் என ஆதிக் அடிக்கடி சொல்வார்.. ஆனால் இந்த படத்தின் வெற்றி மூலம் இப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த கதையை படமாக்கியதற்காக இனிமேல் அவர் ஃபிலிம் மேக்கர் என பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். எடிட்டிங்கின்போது கூட அஜித் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். இதற்கு முன்னதாக அவன் இவன் படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். கிட்டத்தட்ட 200 நாட்கள் எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோது, விஷால் நடித்திருந்த பல காட்சிகளில் பல நாட்கள் அவர் அந்த படத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதை பார்த்தேன். எஸ்.ஜே சூர்யாவை பொருத்தவரை அவர் 90 மற்றும் 2k கிட்ஸ் மேல் விழுந்த பாம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதிக்கின் நெருக்கமான நண்பர் என்பதால் பலமுறை அடுத்தடுத்து எடிட் செய்யப்பட்ட காட்சிகளை கொடுத்தாலும் சலிக்காமல் இசையமைத்து கொடுத்தார்” என்றார்.