ஜி.வி பிரகாஷ், கௌரி கிஷன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் ‘அடியே’. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் டீசன்டான வெற்றியை பெற்றதை தொடர்ந்து அதற்கு காரணமான ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
96 படத்தில் ஜானு என்கிற கதாபாத்திரத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் கௌரி கிஷன். முதன்முறையாக இந்த அடியே படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் நடித்துள்ள செந்தாழினி கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடமிருந்து நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. சொல்லப்போனால் ஜானு கதாபாத்திரத்தையே மறக்க செய்து விட்டீர்கள் என்று கூறும் அளவிற்கு பலரும் பாராட்டுகின்றனராம்.
இது குறித்து இந்த சந்திப்பில் கௌரி கிஷன் பேசும்போது செந்தாழினி – என் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். அதில் நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொள்ளும்போது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு சவாலான கதாபாத்திரம் தான் என நம்பினேன்.
ஜானு என்ற கதாபாத்திரத்திற்கு பிறகு அதைவிட அழுத்தமான செந்தாழினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். செந்தாழினி என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். எனக்கு பிடித்த வேடமும் கூட. சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருப்போம். ஆனால் எனக்கு இந்த படத்தில் பல வெர்சன்ஸ் இருந்தது. ஒரு கலைஞராக இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலானதாக இருந்தது. கதை ஓட்டத்தின் போது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
சமூக வலைதளத்தில் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘ஜானுவை மறக்கடித்து விட்டீர்கள்’ என பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. என்று கூறினார்