கன்னட திரை உலகில் கடந்த சில வருடங்களில் மிகுந்த வரவேற்பை பெற்ற நடிகர்கள் யஷ் மற்றும் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி ஆகியோரின் அடுத்தடுத்த படங்கள் என்னவாக இருக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் கே ஜி எப் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து யஷ் யாருடைய படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி நீண்ட நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பிரபல மலையாக நடிகையும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான கீது மோகன்தாஸ் டைரக்ஷனில் தான் யஷ் நடிக்க உள்ள அவரது 19 ஆவது படம் உருவாக இருக்கிறது என்கிற தகவல் கசிந்துள்ளது.
தனது அடுத்த படத்திற்காக பல கதைகளை தேடி வந்த யஷ்ஷிற்கு கீது மோகன்தாஸ் சொன்ன கதை பல விதங்களில் கவர்ந்து விட்டது. பெண் இயக்குனர் என்றாலும் இது பக்கா ஆக்சன் படமாக உருவாக இருக்கிறதாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி நடித்த மூத்தோன் என்கிற படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.