V4UMEDIA
HomeReviewஜவான் ; விமர்சனம்

ஜவான் ; விமர்சனம்

ஜெயில் அதிகாரியான ஷாருக்கான்  தனக்கென  ஆறு பேர் கொண்ட  பெண்கள் (கைதிகள்) டீமை வைத்து ஒரு மெட்ரோ ரயிலையே ஹைஜாக் செய்து  வங்கி லோன் கட்டாமல் பணத்தை பதுக்கிய தொழிலதிபர் விஜய் சேதுபதியின் மகளை  பிணையாக கடத்தி வைத்து  கிட்டத்தட்ட  40,000 கோடி ரூபாயை அவரிடம் இருந்து பெற்று சில நிமிட நேரத்திற்குள் லோன் கட்ட முடியாத ஏழு லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்கிறார்.

அதேபோல தன்னை பிடிக்க வரும் அதிரடி போலீஸ் கமாண்டோவான நயன்தாராவிடமும் இருந்து  தப்பிக்கிறார்.  ஒரு கட்டத்தில்  குழந்தையுடன் தனியாக வசிக்கும் நயன்தாராவையே ஷாருக்கான் பெண் பார்க்க நேரிடுகிறது. குழந்தைக்கு ஷாருக்கானை பிடித்து போக இருவரது திருமணமும் நடக்கிறது. முதல் இரவுக்கு முன்னாடியே ஷாருக்கானின் நிஜ முகம் நயன்தாராவிற்கு தெரிய வருகிறது.

ஜெயில் அதிகாரியான ஷாருக்கான் ஏன் இப்படிப்பட்ட செயல்களில்  ஈடுபடுகிறார் ? இதன் பின்னணியில்  அவருக்கு என்ன லாபம் ?  இல்லை அவருக்கான பாதிப்பு தான் என்ன  என்கிற விஷயம் எல்லாம்  நயன்தாராவுக்கு மட்டுமல்ல நமக்கும் தெரிய வருகிறது.  இதைத்தொடர்ந்து  நயன்தாரா  தனது கணவருக்கு கை கொடுத்தாரா ? இல்லை கை விலங்கிட்டாரா என்பது  மீதிக்கதை.

சர்தார், ஆரம்பம், வெற்றி விழா என தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்து சலித்த கதை தான் என்றாலும் இவற்றையெல்லாம் தனது ஸ்டைலில்  பஞ்சாமிர்தமாக குழைத்து ஹிந்தி ரசிகர்களுக்கு பிரசாதமாக கொடுத்து இருக்கிறார்  இயக்குனர் அட்லீ.  ஷாருக்கான் என்கிற மாஸ் ஹீரோவுக்கு  ஒரு ஆக்சன் படத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ அது அத்தனையும்  குறைவர  செய்திருக்கிறார் அட்லீ.

இரண்டு கதாபாத்திரங்கள் நான்கு கெட்டப்புகள் என அசத்துகிறார் கிங் கான்.  இத்தனை வயதிலும் உடம்பை பிட்டாக வைத்துக்கொண்டு ஆக்சனில் பின்னி பெடல் எடுக்கிறார் மனிதர். குறிப்பாக  கன்டெய்னர்  சேசிங் காட்சிகளில்  இளம் ஹீரோக்களுக்கு சவால் விடுகிறார் ஷாருக்கான்.

ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகளாக ஜாடிக்கேத்த மூடியாக நயன்தாரா  மற்றும் தீபிகா படுகோன் என இருவர்.  நயன்தாரா  பில்லா,  இருமுகன், இமைக்கா நொடிகள்  படங்களுக்குப் பிறகு  இதில் மீண்டும் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். பல இடங்களில் அவரது செயல்பாடுகளில் செயற்கைத் தனம் வெளிப்பட்டாலும்  நயன்தாராவிற்காக  அதையெல்லாம்  புறம் தள்ளிவிடலாம்.

அதேபோல பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் தீபிகா படுகோன்  அந்த ஆக்சன் ஏரியாவில் அமர்க்களப்படுத்தி விடுகிறார். கிளைமாக்ஸில்  சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார் உயர் போலீஸ் அதிகாரியான சஞ்சய் தத்.

தென்னிந்திய சினிமாவுக்கு மட்டுமல்ல இனி பாலிவுட்டுக்கும் நான் தான் வில்லன் என அலட்டல் இல்லாத வில்லத்தனத்தில் கலக்குகிறார் விஜய்சேதுபதி.  இருந்தாலும்  மாஸ்டர்,  விக்ரம் படங்களில்  பார்த்த அவரது  வில்லத்தனத்துடன் ஒப்பிட்டால்  இதில் கொஞ்சம் குறைவு தான்,

யோகிபாபு கூட கொஞ்ச நேரம் வந்து ஓரளவுக்கு சிரிக்க வைத்துவிட்டு  பாலிவுட்டிலும் தனது என்ட்ரியை பதிய வைத்து சென்றுள்ளார்.  ஷாருக்கானுக்கு பக்கபலமாக இருக்கும் ஆக்சன் கேர்ள்ஸில் தலைமை பெண்ணான  பிரியாமணியின் அதிரடி வேகம் இப்போதும் ஆச்சரியப்பட வைக்கிறது.

அனிருத் எந்த இடத்திலும்  விறுவிறுப்பு குறைந்து விடக்கூடாது என  பின்னணி   இசையில் மிரட்டி உருட்டி இருக்கிறார். தமிழைத் தாண்டி பாலிவுட்டிற்கு சென்றுள்ள அட்லீக்கு இந்த படம் கை கொடுக்குமா என்றால் நிச்சயமாக கை கொடுக்கும்.  இந்த வகை பாணி தமிழுக்கு  பழசு என்றாலும் ஹிந்தி ரசிகர்கள்  இந்த படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள்.  ஆனால் அடுத்த படத்திற்கும் இதே பாணி கை கொடுக்குமா என்று  உத்தரவாதம் தர முடியாது.

அதனால் என்ன இந்த வெற்றியை கொண்டாடிவிட்டு அதை அப்புறம் பார்ப்போம் என  இறங்கி அடித்திருக்கிறார் இயக்குனர் அட்லீ. பாலிவுட்டில்  எடுத்து வைத்த முதல் அடியே அவருக்கு வெற்றிப்படியாக  அமைந்துள்ளது இந்த ஜவான் மூலம்.

Most Popular

Recent Comments