வெங்கட் பிரபு பிஸியான இயக்குனராக முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்தாலும் இன்னொரு பக்கம் நட்புக்காக யாரேனும் கேட்டால் சில படங்களில் நடித்துக் கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ், கௌரி கிஷன் இணைந்து நடித்துள்ள அடியே என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் இவரது கதாபாத்திரம் என்னவென்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஆம் இயக்குனர் கௌதம் மேனன் கதாபாத்திரத்தில் தான் இந்த படத்தில் நடித்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறும்போது, “உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நான் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்லும் போதே மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது. கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன் என்று இன்னும் அவருக்கு தெரியாது. அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவராக நடித்திருக்கிறேன்.
இந்த கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தான். அவர் ஒரு பல குரல் வித்தகர். இந்த திரைப்படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒன்று விஞ்ஞானியாகவும், மற்றொன்று கெளதம் வாசுதேவ் மேனனாகவும் நடித்திருக்கிறேன். இரண்டுமே சிரமமான கதாபாத்திரங்கள் தான்.
இந்த திரைப்படத்தில் நான் விஜய் சார் படத்தை இயக்கி விட்டதாக கதையில் வரும். இந்த விளம்பரம் வெளியான பிறகு தான் எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது’ என்று கூறியுள்ளார்.