தமிழ் சினிமாவில் இன்று கிட்டத்தட்ட 80 சதவீத படங்களுக்கு மேல் பார்த்தால் புகை பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது அருந்தும் காட்சிகள் தவறாமல் இடம்பெற்று வருகின்றன. முன்னணி ஹீரோக்களில் பல பேர் கூட புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறார்கள்.
அது மட்டுமல்ல பல படங்களிலும் மது அருந்தும் காட்சிகளையும் அதனால் ஏற்படும் வன்முறைகளையும் காட்டுகிறார்கள். இந்த நிலையில் இது போன்று புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை படங்களில் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என நடிகர் சந்தானம் கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டன்ஸ் என்கிற படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சந்தானம் பேசும்போது, “டிடி ரிட்டன்ஸ் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நான் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி என்கிற படம் வெளியாக இருக்கிறது.
நகைச்சுவை நடிகராக நடிக்கும்போது ரொம்ப எளிதாக இருந்தது. இப்போது கதாநாயகனாக நடிக்கும்போது பல மடங்கு வேலை வாங்குகிறார்கள். படத்தில் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது நல்லது” என்றும் அவர் கூறினார்.