மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக மாறியவர் நடிகர் சந்தீப் கிஷன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாயவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சந்தீப் கிஷன், தொடர்ந்து தெலுங்கிலும் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள மைக்கேல் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சந்தீப் கிஷன். மேலும் இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் நடித்துள்ளார்.


கதாநாயகியாக திவ்யான்ஷா மற்றும் தீப்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரை பார்த்து வியந்துபோன நடிகர் விஜய், சந்தீப் கிஷனிடம் இதுகுறித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற தளபதி 67 ஆவது படத்தின் பூஜையின்போது அதில் கலந்து கொண்ட சந்தீப் கிஷனிடம் நேரிலேயே தனது பாராட்டுகளை தெரிவித்து அவரை உற்சாகப்படுத்தியுள்ளார் விஜய்.
இது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ள சந்திப் கிஷன், “மைக்கேல் படத்திற்காக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி அன்புள்ள தளபதி.. இவ்வளவு எளிமையாகவும் உற்சாக தூண்டுதலாகவும் நீங்கள் இருப்பதற்கு லவ் யூ அண்ணா” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.