HomeNewsKollywoodவாரிசு என்பது படமல்ல.. விஜய் என்மீது வைத்த நம்பிக்கை ; இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி நெகிழ்ச்சி

வாரிசு என்பது படமல்ல.. விஜய் என்மீது வைத்த நம்பிக்கை ; இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி நெகிழ்ச்சி

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல்களுடன் இந்தப்படத்திற்கு முதன்முதலாக வசனமும் எழுதியுள்ளார்.

தமிழில் வெளியாகி இரண்டு தினங்கள் கழித்து தற்போது தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்த படம் அங்கேயும் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி பேசும்போது, “இந்த மொத்த படத்தின் வெற்றியையும் புரொடக்சன் டிசைனராக இருந்து சமீபத்தில் எங்களை விட்டு மறைந்த சுனில் பாபுவுக்கு காணிக்கையாக செலுத்துகிறோம். வாரிசு ஒரு படம் அல்ல.. அது ஒரு நம்பிக்கை.. தளபதி விஜய், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வெற்றியாக்கிய தமிழ் மக்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் இந்த படம் துவங்கிய நாளிலிருந்து தெலுங்கு இயக்குனர் படம் என்றே சொல்லி வந்தது என் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்தியது.. இது பக்கா தமிழ் படம் தான். நான் தமிழ் இயக்குனரா தெலுங்கு இயக்குனரா என்பதை தாண்டி முதலில் ஒரு மனிதன். அந்தவகையில் ரசிகர்களும் இந்த வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வாரிசு படத்தில் வெற்றியால் உங்கள் நெஞ்சில் எனக்கு ஒரு இடம் கொடுத்து விட்டீர்கள்..

இந்த படம் ஆரம்பித்தபோதும், முடிவடைந்த போதும், அவ்வளவு ஏன், படம் இப்போது வெளியாகி இருக்கும் நிலையிலும் கூட விஜய் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி நீங்கள் மகிழ்ச்சிதானே என்பதுதான். அந்த ஒரு வார்த்தை போதும். எனக்கு. இந்த படத்திற்காக தயாரிப்பாளர் தில் ராஜு நான் கேட்டதெல்லாம் கொடுத்தார். இந்த படத்தின் வெற்றியை உயர்த்திப்பிடித்துள்ள இசையமைப்பாளர் தமன் இன்னும் நிறைய உயரம் போகவேண்டும் என வாழ்த்துகிறேன். பாடல் மட்டுமல்லாது கதை வசனத்திலும் ஒத்துழைப்பு தந்த விவேக், நேர்த்தியான படத்தொகுப்பை அளித்த பிரவீண் கே.எல் என அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தப்படம் பார்த்த என் தந்தை, படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பை பார்த்துவிட்டு படம் முடிந்ததும் வெளியே வந்து என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். என் அப்பாவிடம் இருந்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக இதை கருதுகிறேன். படம் பார்த்த பலரும் அவர்களது அப்பா அம்மாவுக்கு போன் செய்து இந்த படத்தை பாருங்கள் என்று கூறியதை நேரிலேயே பார்க்க முடிந்தது. ஷாம், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ராஷ்மிகா, சங்கீதா என எல்லோருமே இந்த படத்திற்கு உறுதுணையாக நின்றுள்ளார்கள்.. அனைவருக்கும் எனது நன்றி” என்று கூறினார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments