கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற கேஜிஎப்-1, கேஜிஎப்-2, காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பலே நிறுவனம்.


இந்தப்படங்களின் தொடர் வெற்றிகளால் இந்த நிறுவனத்தின் பெயர் ரசிகர்களின் மனதில் பதியும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள இந்த நிலையில் 3000 கோடி ரூபாயை திரையுலகில் முதலீடு செய்ய இருப்பதாக இந்தத் தமிழ் புத்தாண்டு தினத்தில் அறிவித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது ஹோம்பலே நிறுவனம்.


ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.


தற்போது ‘பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில், ‘கே ஜி எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் திரைப்படத்தையும், தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘ரகு தாத்தா’ என்ற படத்தையும், இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் ‘டைசன்’ எனும் திரைப்படத்தையும், ‘சார்லி 777’ புகழ் ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில் ‘ரிச்சர்ட் ஆண்டனி’ எனும் திரைப்படத்தையும் இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது,