சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியபின் பெரும்பாலும் தனது படங்களில் காமெடியை குறைவில்லாமல் பார்த்து கொண்டு வருகிறார். அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான குலுகுலு திரைப்படம் வேறுவிதமான சந்தானத்தை காட்டியது. ஆனால் காமெடியும் சற்று குறைவாகவே இருந்தது என ரசிகர்கள் குறைபட்டு கொண்டனர்.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் என்கிற படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் என்கிற படம் வெளியானதே, அந்த படத்தை இயக்கிய அனுதீப் தெலுங்கில் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் விஜய் டிவி புகழ் நடித்துள்ளார். வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் உருவான விதம் குறித்து படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா கூறும்போது தெலுங்கு படத்தின் உரிமை என்னிடம் இருந்தது அதை கேள்விப்பட்ட சந்தானம் சார் என்னை அணுகினார். தெலுங்கில் இருப்பது போலவே தமிழில் இந்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை. காமெடி மற்றும் பஞ்ச் இரண்டையும் தான் உங்கள் ரசிகர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். அதை தவிர்த்து வேறு ஒரு பரிமாணத்தில் சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க நான் விரும்புகிறேன் என்று சந்தானம் சாரிடம் சொன்னேன்.

அதன்பிறகு அவரும் ஒத்துக் கொண்டு இந்த கதைக்குள் வந்தார்.நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம். இதில் வழக்கமான சந்தானத்தை பார்க்க முடியாது. அதிகம் பேசாமல், அதேசமயம் அதிக அளவில் எமோஷன்களை காட்டி நடித்துள்ளார்.
இது ஒரு தாய்க்கும், மகனுக்குமான பாசப் போராட்டம். அதில் அந்த மகனின் கதாபாத்திரம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட். அப்படித்தான் இந்த கதையை நான் கட்டமைத்துள்ளேன். கதாநாயகி ரியா சுமன், குரு சோமசுந்தரம், முனீஸ் காந்த், புகழ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒப்பாரி பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. வரும் 25ஆம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. என்னுடைய முதல் படமான வஞ்சகர் உலகம் படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை போல் இந்த படத்திற்கும் தர வேண்டும் என்றார்


























