அரவிந்தசாமிக்கு தனி ஒருவன் போல, இறுதிச்சுற்று படத்தின் மூலம் மாதவனின் இரண்டாவது இன்னிங்ஸும் வெற்றிகரமாகத்தான் துவங்கியது. ஆனாலும் அரவிந்தசாமியை போல மளமளவென படங்களை ஒப்புக்கொள்ளாமல் செலக்டிவாக நடித்துவருகிறார் மாதவன்.

தற்போது இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறாக உருவாகும் ‘ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட்ஸ்’ என்கிற படத்தில் நடித்துள்ளதுடன் தானே முதன்முறையாக இயக்குனராகவும் மாறியுள்ளார்.

பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாக தொண்ணூறுகளில் குற்றம் சாட்டப்பட்டு, தனது வேலையை இழந்ததுடன் சிறைவாசத்தையும் சந்தித்தவர் தான் நம்பி நாராயணன். பின்னர் அந்த வழக்கில் நிரபாரதி என நிரூபிக்கப்பட்டார்.

இந்தப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் வரும் மே 19 வியாழன் அன்று இரவு 9 மணிக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டின் போது, இந்த ஆண்டு கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டில் இந்தியாவை அதிகாரப்பூர்வ நாடாகக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக நடைபெறும் ‘பாலைஸ் டெஸ் ஃபெஸ்டிவல் பிரீமியர்’ பிரிவில் இப்படம் திரையிடப்படவுள்ளது..


























