இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விஜய் பிரகாஷ். இவர் ஏற்கனவே சாதிசனம், காதல் எப்எம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது உலகம்மை என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் பின்னணி இசையை தற்போது இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்கிற நாவலை தழுவித்தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் பிரகாஷ். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய காலத்திலேயே எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவல்களின் மீது தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார் இயக்குனர் விஜய் பிரகாஷ்.
அதனாலேயே அவர் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்கிற நாவலை தற்போது திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்கான உரிமையை சு சமுத்திரம் அவர்கள் மனைவியிடமிருந்து முறைப்படி பெற்றும் உள்ளார்.
இந்த படத்தில் 96 புகழ் கௌரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகம்மை என்கிற கிராமத்துப் பெண் அந்த காலத்தில் நிலவிய சாதிய அமைப்பை எப்படி எதிர்க்கிறார் என்பதை எழுபதுகளின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக விவரிக்கிறது இந்தப்படம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


























