சமீப காலமாக சாதியை முன்னிறுத்தி சில படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைத தான் பல படங்கள் கூறி வருகின்றனவே தவிர சாதிகள் மறந்து மக்களுக்குள் இணக்கம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தும் படங்கள் வெகு குறைவு.
இந்த நிலையில் தான் இயக்குனர் சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள தமிழ்க்குடிமகன் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. பகிரி, பெட்டிக்கடை ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சரத்குமார், இயக்குனர்கள் அமீர், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது, தான் பிறந்த சாதியின் காரணமாக வழிவழியாக தாங்கள் செய்து வந்த அதே தொழிலை செய்ய தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்படுவதும், அது வேண்டாம் என ஒதுங்கி தங்களுக்கான புதிய வாழ்க்கையை தேட முயற்சிக்கும் ஒரு இளைஞன் இந்த சமூகத்தில் உயர் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை மையப்படுத்தியும் இந்த படம் உருவாகி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நிச்சயமாக இந்த படத்தில் இந்த பிரச்சனைகளுக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.