பான் இந்திய நடிகராக மாறிவிட்ட தனுஷ், தமிழையும் தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி என்கிற படத்தில் நடித்திருந்தார் தனுஷ்.
இதை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது
ஸ்ரீ நாராயணன் தாஸ் நாரங் அவர்களின் ஆசியுடன் சுனில் நாரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP (ஆசியன் குரூப்பின் ஒரு பிரிவு) மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் இந்த படம் தயாராகிறது. சோனாலி நாரங் இந்த படத்தை வழங்குகிறார்
தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னணி நடிகர்களின் படங்களின் கதாநாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் முதன்முறையாக தனுஷ் உடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.