சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களை அழைத்து வந்து நடிக்க வைப்பது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. அப்படி அவர்களை நடிக்க வைப்பது படத்திற்கு இன்னும் கூடுதல் ஆச்சரியத்தையும் வியாபாரத்தையும் வழங்குகிறது.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக பாதையை மாற்றி பயணித்து வரும் நடிகர் சுனில் தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் இவர் பிரபலமானதால் தமிழில் இவருக்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுனில்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் புல்லட் என்கிற படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் நடிகர் சுனில்.
டைரி என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் இன்னாசி பாண்டியன் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக வைசாலி ராஜ் நடிக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார் .