கடந்த 2005-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இயக்குனர் பி.வாசுவே இயக்கி உள்ளார்.
கங்கனா ரணவத், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே என கிட்டத்தட்ட ஐந்து கதாநாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அது மட்டுமல்ல நடிகை ராதிகா மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் ஹைலைட்டாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஆஸ்கர் விருது புகழ் கீரவாணி.
இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது சந்திரமுகி படத்தில் ஹைலைட்டாக அமைந்த வேட்டையன் மகாராஜா கதாபாத்திரம் தற்போது லாரன்ஸின் வடிவில் போஸ்டராக வெளியாகி உள்ளது.
போஸ்டரில் பார்க்கும்போது இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் நன்றாக இருந்தாலும் படத்தில் அதை ராகவா லாரன்ஸ் எவ்வாறு பிரதிபலித்துள்ளார் என்பதை பொறுத்து இதற்கான வரவேற்பு அமையும் என்று சொல்லலாம். காரணம் அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடித்த அந்த வேட்டையன் கதாபாத்திரத்தை தாண்டி, இந்த புது வேட்டையன் ரசிகர்களை ஈர்க்க என்ன செய்யப் போகிறார் பொறுத்திருந்து பார்க்கலாம்.