இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களின் வரவேபை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக திவ்யான்ஷா கவுசிக், வரலட்சுமி ஆகியோருடன் கவனிக்கத்தக்க வேடத்தில் நடித்துள்ளார் நடிகை தீப்ஷிகா. இந்த படத்தில் கௌதம் மேனனின் இரண்டாவது மனைவியாக, சிறு வயது சந்தீப் கிஷனின் தாயாக, கிளப்பில் பாடும் பாடகியாக, ஒரு அழகு பொம்மை போல் காட்சியளித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார் தீப்ஷிகா.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து, படித்த, நம்ம ஊர் பொண்ணுதான் தீப்ஷிகா. ஆனால் தமிழில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தெலுங்கில் இருந்து வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. அந்த வகையில் தெலுங்கிலேயே கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் தீப்ஷிகா. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் விதமாக தயாராகி வருகின்றன.
அதன் முன்னோட்டமாகத்தான் தீப்ஷிகாவின் திரையுலக பயண எல்லையை முதல் படத்தில் இருந்தே விரிவாக்கும் விதமாக பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள மைக்கேல் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெளிச்சத்தையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
தொடர்ந்து தான் நடிக்கும் படங்கள் குறித்து கூறும் போது தற்போது தெலுங்கில் ‘உத்வேகம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம். அது மட்டுமல்ல சமூக ஆர்வலரும் கூட.. பொது பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றிற்கு சட்டரீதியாக போராடும் ஒரு வலுவான கதாபாத்திரம். படத்தின் கதாநாயகனாக அருண் ஆதித்யா நடித்துள்ளார் அவருக்கும் கூட வழக்கறிஞர் கதாபாத்திரம் தான்.. எங்கள் இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.
அடுத்ததாக தெலுங்கில் நான் நடித்துள்ள ராவண கல்யாணம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் சந்தீப் மாதவ் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் ரவிதேஜாவின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்து விட்டேன். தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் இருந்து என்னைத்தேடி பட வாய்ப்புகள் வருவதால் தற்போதைக்கு தெலுங்கில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகிறேன்.
தமிழிலும் நான் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். தெலுங்கில் ஒரு பான் இந்தியா படத்தில் அறிமுகமானது சந்தோசம் தான்.. அடுத்த படமும் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இப்படி அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். இன்னும் உற்சாகமாக எனது பயணத்தை தொடர்கிறேன்” என்கிறார் தீப்ஷிகா.

















