தமிழ் சினிமாவில் பசங்க என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். தொடர்ந்து கிராமத்து பின்னணி கொண்ட அற்புதமான பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய இரண்டு படங்களும் அவரது கடைக்குட்டி சிங்கம் படத்தை போல மிகப்பெரிய வெற்றியை தொட்டே முடியவில்லை.
இந்த நிலையில் அந்த படத்தை தொடர்ந்து படம் இயக்காமல் அமைதி காத்து வரும் இயக்குனர் பாண்டிராஜ், சமீபகாலமாக தனது சொந்த ஊரில் உள்ள தனது சொந்த நிலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
தான் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதிப்பதன் மூலம் தனது பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைத்தாராம் இயக்குனர் பாண்டிராஜ். ஆனால் அவர்களது உண்மையான மகிழ்ச்சி கிராமத்தில் உள்ள தங்களது நிலம் விவசாய நிலமாக மாறி அதில் விவசாயம் நடந்தால் மட்டுமே சந்தோஷமாக இருப்பார்கள் என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டதாக கூறியுள்ள பாண்டிராஜ், அதைத்தொடர்ந்து பல கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு தற்போது தங்களது சொந்த நிலத்தில் நெல் விளைவித்து அறுவடை செய்துள்ளார்.
முதல் முறையிலேயே 114 மூடை நெல் அறுவடை செய்துள்ளதாக கூறியுள்ளார் பாண்டிராஜ். இவர் இந்த விவசாய பணிகளை துவங்கியதிலிருந்து நெல் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தது வரை அனைத்தையும் கணக்கெழுதி வைத்து அவரது மனைவி விவசாயத்தில் தங்களுக்கு லாபமே கிடைத்ததாக கணவரிடம் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பாண்டிராஜ் கூறும்போது இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் எதையும் எதிர்பாராமல் இதற்காகத்தான் உழைத்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவர்கள் அதைத் தாண்டி பயிரை விளைய வைத்து நமக்கு கொடுக்க பாடுபட்டு வருகிறார்கள். அதனால் விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து விவசாயிகள் அதையே தான் செய்கிறார்கள். இந்த வருடமாவது லாபம் பார்த்து விடுவோம் என்று மனம் தளராமல் இருப்பது தான் விவசாயத்தின் சக்தி என்று கூறியுள்ளார்.