Home News Kollywood ‘ஃபீனிக்ஸ்’-வீழான் திரைப்படத்தின் குறுமுன்னோட்டம்(டீசர்) வெளியாகி 3 மில்லியன் பார்வைகளை கடந்தது!

‘ஃபீனிக்ஸ்’-வீழான் திரைப்படத்தின் குறுமுன்னோட்டம்(டீசர்) வெளியாகி 3 மில்லியன் பார்வைகளை கடந்தது!

சண்டைப் பயிற்சி இயக்குனர் ‘அனல்’அரசு இயக்குனராக
அறிமுகம் ஆகும் ஃபீனிக்ஸ்(வீழான்) திரைப்படத்தின் குறுமுன்னோட்ட வெளியீட்டு விழா, கடந்த ஜூன் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ப்ரிவியூ திரையரங்கில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப் பட்டது.

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி போன்ற மொழிகளில் உருவாகும் திரைப்படங்களுக்கு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிங்கம்-1,சிங்கம்-2, கத்தி, மெர்சல்,பிகில் மற்றும் அடுத்து வெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களில் பணியாற்றி உள்ளார்.

அதேபோல மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டில் முன்னணி திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார். சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான ‘ஜவான்’ போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’-வீழான், திரைப்படதின் மூலம் தானும் ஒரு இயக்குனராக அறிமுகமாகிறார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் அவரது மனைவி ராஜலக்ஷ்மி அரசகுமார் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். ‘பீனிக்ஸ்’-வீழான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் தந்தையர் தினம் மற்றும் ‘அனல்’அரசு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் குறுமுன்னோட்டம்(டீசர்) வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழு, விஜய்சேதுபதி,’அனல்’அரசு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய விஜய்சேதுபதி,“என் மகன் சினிமாவுக்கு வருவதை பற்றி எந்தவிதமான திட்டமிடலும் இல்லை.‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்தபிறகு ‘அனல்’அரசு மாஸ்டர் என் மகனை சந்தித்து கதை சொன்னார். இதை நான் துளியும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. திரைத்துறைக்குள் தாக்குப் பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் என் மகனுக்கு சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் தாக்குப்பிடிப்பது மிக மிக கஷ்டம். ஆனால் அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. அனல் அரசு என்ற அற்புதமான மனிதர் மூலமாக அவன் அறிமுகம் ஆகிறான். அவன் பிறந்து இதுவரைக்கும் 19 தந்தையர் தினம் கொண்டாடி இருக்கிறேன். ஆனால் இதுதான் எனது சிறந்த தந்தையர் தினம்”என்றார்.

‘அனல்’அரசு அவர்கள் பேசும் பொழுது,”இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த எனது மனைவிக்கும் மற்றும் கடவுளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்றார்.

படத்தின் கதாநாயகன் சூர்யா பேசும் பொழுது,”இத்திரைப்படத்தை எனது பரிசாக மாஸ்டர் ‘அனல்’அரசு அவர்களுக்கு அளிக்கிறேன்.எனது முழு ஒத்துழைப்பையும் இந்த படத்திற்காக வழங்கி இருக்கிறேன் என்று நான் நம்புகிறேன்”,என்றார்.

முன்னதாக ‘அனல்’அரசு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு படக்குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. பின்னர் அவர் பிறந்தநாள் கேக் வெட்டி மகிழ்ந்தார்.

இத்திரைப்படத்தில் சூர்யா, வரலக்ஷ்மி சரத்குமார்,சம்பத், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், தேவதர்ஷினி, முத்துக்குமார், ‘மூணாறு’ரமேஷ், திலீபன், விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத், அபி நக்ஷத்ரா, ‘ஆடுகளம்’முருகதாஸ், சத்யா.என்.ஜே., ‘அட்டி’ரிஷி, பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, R.வேல்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராகவும், கே.மதன் கலை இயக்குனராகவும், சத்யா.என்.ஜே ஆடை வடிவமைப்பாளராகவும், எம்.எஸ்.முருகராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இதனிடையே ஃபீனிக்ஸ் டீசர் 3 மில்லியன் பார்வைகளை கடந்து வெற்றி நடை போடுகிறது. படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.