ஏ.ஆர்.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ‘சிற்பி’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் ‘மாஸ்டர்’ சரபேஷ், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் முத்துக்குமார், வினோத் சாகர்,அரோல் சங்கர்,பூமிகா ஷெட்டி,ரோஜாஸ்ரீ,பாப்ரி கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் மூலக்கதை செந்தில் ஜெகந்நாதனின் ‘எவ்வம்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

திரைக்கதை எழுதி,படத்தை சிவகணேஷ் இயக்கி வருகிறார். இவர் தமிழில் சிங்கப்பெண்ணே, போலீஸ் டைரி ஆகிய இணையதளத் தொடர்களை ஜீ5-ஓடிடி தளத்திற்காக இயக்கியவர். இது மட்டுமில்லாமல் கன்னடத்தில் 8 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். சுதீப் தயாரித்த ‘ஜிகர்தண்டா’, ரவிச்சந்திரன் நடித்த ‘ஆ திருஷ்யா’ திரைப்படத்தையும் இயக்கியவர் ஆவார். சென்னையை சேர்ந்த இவர் இசைக்கல்லூரி மாணவர் மற்றும் பல விளம்பர படங்களை இயக்கியவர். கர்நாடக மாநில திரைப்பட விருதுகளை பெற்ற தமிழரான இவர் இயக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘சிற்பி’.
ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். கலை இயக்கத்தை சுப்பு அழகப்பன் கவனிக்க, தேவராஜ் படத்தொகுப்பை மேற்கொள்ள, சண்டைப்பயிற்சியை ‘மிரட்டல்’ செல்வாவும், நடனத்தை பாபி மாஸ்டரும் அமைத்து கொடுத்து இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.’கவிப்பேரரசு’ வைரமுத்துவின் வைர வரிகளில் பாடல்கள் உருவாகி இருப்பது, படத்திற்கு மிகப்பெரிய பலத்தினை சேர்த்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் சிவகுமார் மற்றும் கோதை நாயகி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள், தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.