V4UMEDIA
HomeNewsKollywoodமறைந்தார் 'டேனியல்' பாலாஜி!

மறைந்தார் ‘டேனியல்’ பாலாஜி!

தமிழ்த் திரையுலகில் சமீபகாலமாக அழுத்தமான வில்லன் நடிகருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனது தனித்திறன் மிக்க வில்லன் நடிப்பால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட நடிகராக விளங்கியவர் திரு. டேனியல் பாலாஜி ஆவார். தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கிய மறைந்த நடிகர் முரளி அவர்களின் உறவினர் ஆவார். இருந்தாலும் தனது சொந்த முயற்சியால் கடின உழைப்பால் தன்னைத்தானே திரைத்துறையில் உயர்த்திக் கொண்டவர் ஆவார்.

இவர் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் தனக்கான இடத்தை தானே செதுக்கியவராவார். இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ மற்றும் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்திலும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் ‘தளபதி’ விஜய் அவர்களுடன் ‘பிகில்’ மற்றும் ‘பைரவா’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் அவர்களின் ‘பொல்லாதவன்’ மற்றும் ‘வட சென்னை’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத விதமாக, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இது தமிழ்த் திரையுலகினரை மாபெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மற்றும் பல கலைஞர்களும் அவரது உடலுக்கு நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர் விட்டுச் சென்ற இடம் வெற்றிடமாகவே இருக்கும் என பலரும் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டு உள்ளனர். அவரது நல்ல மனதிற்கு எடுத்துக் காட்டாக தனது இரு கண்களையும் தானமாக வழங்கியுள்ளார்.நமது V4U மீடியா, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

Most Popular

Recent Comments