மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியானது. விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.. எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரித்து வர்மா, அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகெங்கிலும் இப்போதுவரை 100 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுடன் வெற்றிச் சந்திப்பை மார்க் ஆண்டனி குழுவினர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் படத்தின் வெற்றி குறித்து தங்களது உணர்வுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது, “ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எளிதாக படம் எடுத்து ரிலீஸ் செய்ய முடியும்.. ஆனால் ஒரு தனி மனிதராக, ஒன் மேன் ஆர்மியாக இந்த படத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார் தயாரிப்பாளர் வினோத். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் தான் நம் திரையுலகுக்கு அதிகம் தேவை. விஷாலுடன் இனி எத்தனை படங்கள் சேர்ந்து நடிப்போம் என தெரியாது. ஆனால் அவரின் பரந்த மனதில் எனக்கு ஒரு இடம் வேண்டும். இந்த படம் பார்த்த பலரும் மன அழுத்தம் குறைந்து மக்களை சிரிக்க வைத்துள்ளீர்கள் என்று கூறுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது வாழ்க்கையில் நியூ, அன்பே ஆருயிரே படங்கள் வந்த சமயத்திலேயே அன்றைய முன்னணி நடிகர்களின் படத்திற்கு இணையாக எனது படங்களின் விநியோக உரிமையும் விலை போனது. இடையில் என் வாழ்க்கை எப்படியோ திசைமாறி சரிவுக்கு போய், பின்னர் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படம் மூலமாக மீண்டும் திசைதிரும்பி மாநாடு படத்தின் மூலம் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு, இப்போது இந்த மார்க் ஆண்டனியின் மூலமாக அதே அன்பே ஆருயிரே சமயத்தில் எனக்கு இருந்த இடத்தை 75% மீட்டுக் கொடுத்துள்ளது. ரசிகர்களுக்காக இன்னும் அதிகமாக உழைப்பேன்” என்று கூறினார்.