மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியானது. விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.. எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரித்து வர்மா, அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகெங்கிலும் இப்போதுவரை 100 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுடன் வெற்றிச் சந்திப்பை மார்க் ஆண்டனி குழுவினர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் படத்தின் வெற்றி குறித்து தங்களது உணர்வுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
நாயகன் விஷால் பேசும்போது, “
இதற்கு முன் ஒரு விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஆதிக்கின் டைரக்சனில் திரிஷா இல்லேன்னா நயன்தாரா படமும் என்னுடைய பாயும் புலி படமும் வெளியானது. எனது படத்தை ஆதிக்கின் படம் கீழே தள்ளிவிட்டது. அதேபோல இன்னொரு விநாயகர் சதுர்த்தி சமயத்தில் நான் நடித்த ‘மதகஜராஜா’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வேலைகளை பார்த்தோம். அனைத்து பிரச்சினைகளும் முடிந்து விட்டதாக நினைத்து சந்தோஷமாக இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக அந்தப்படம் வெளியாக முடியவில்லை. இப்போது மார்க் ஆண்டனி அதேபோன்று ஒரு விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதை பார்க்கும்போது கடவுள் என்னிடம் உனக்கான நேரம் 2012ல் அல்ல 2023 ல் தான் இருக்கிறது என்று சொன்னதைப் போல உணர்கிறேன். நான் செல்லும் பாதையில் பலமுறை ஒவ்வொரு தடையாக வந்து விழுகிறது. அது நேர்மையாக இருந்தால் ஓகே. ஆனால் தவறாக இருந்தால் அதை ஒவ்வொரு முறையும் உடைத்தெறிந்து முன்னேறுவேன்” என்று கூறினார்