HomeReviewமார்க் ஆண்டனி ; விமர்சனம் 

மார்க் ஆண்டனி ; விமர்சனம் 

70களின் காலகட்டத்தில் விஞ்ஞானி செல்வராகவன் ஒரு  டைம் ட்ராவல்  டெலிபோனை கண்டுபிடிக்கிறார். அதன்மூலம் கடந்த காலத்தில்  இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு  பேசுவதுடன், அவர்கள் மூலமாக  நடந்த நிகழ்வுகளையும்  மாற்றி அமைக்கும்  வசதி  அந்த டெலிபோனில்  கிடைக்கிறது,  பல வருடங்களுக்குப் பிறகு அந்த  டெலிபோன்  90 காலகட்டத்தில் கார் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் விஷாலின் கைகளில் கிடைக்கிறது, 

தாதாவான  எஸ்.ஜே சூர்யா தனது நண்பன் (அவரும் விஷால் தான்) மகனான விஷாலை தனது சொந்த பிள்ளை போல வளர்த்து வருகிறார். விஷால்  மெக்கானிக் செட் வைத்திருக்கிறார். அதேசமயம் எஸ்.ஜே சூர்யாவின் மகன்  இளைய எஸ் ஜே சூர்யா தாதா ஆக வேண்டும் என முயற்சிக்கிறார்.  ஏற்கனவே தனது தாயை கொன்றுவிட்டார் என தந்தை மீது வெறுப்பில் இருக்கும்  விஷாலுக்கு  இந்த  டைம் டிராவல் தொலைபேசி மூலமாக  தன் தந்தை  நல்லவர் என்றும் அவரை கொன்றது யார் என்றும்  தெரிய வருகிறது.

இதன் மூலம் நடந்த தவறை நடக்க விடாமல் தடுத்து தனது தந்தையை  காப்பாற்ற முயற்சி செய்கிறார் விஷால். இது யாருக்கு பாதிப்பு ஏற்படுத்தியது,  அதை தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்படும் குளறுபடிகள் என்ன,  அதை எல்லாம் விஷால் எப்படி சமாளித்தார், விஷாலின் நண்பனாக அதே சமயம் தாதாவாக ஆசைப்படும் எஸ்.ஜே சூர்யாவுக்கு இந்த டைம் டிராவல் தொலைபேசியால் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் என்னென்ன இடைஞ்சல்கள் ஏற்படுகிறது  என்பதை எல்லாம் கலந்து கட்டி ஒரு கமர்சியல் மசாலாவாக  கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

படம் பார்க்க துவங்கும்போதே லாஜிக் என்கிற விஷயத்தை எல்லாம் ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு பார்க்க ஆரம்பித்தால் இதைப்போன்ற ஒரு சுவாரசியமான படம்  இருக்க முடியாது.  விஷால் தன்னை இந்த படத்திற்காக  உருமாற்றிக் கொண்டுள்ளதை பார்க்கும்போது,  இந்த படத்தின்  கதை மீது அவர் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.   அடர்ந்த மீசை தாடியுடன், பின்னர் மீசை இல்லாமல், கிளைமாக்ஸ்சில் மொட்டைத்தலை என விதவிதமான கெட்டப்பில்  விஷால்  இந்த படத்திற்காக இறங்கி அடித்திருக்கிறார். அதில் அந்த மொட்டைத்தலை கதாபாத்திரம்  ரசிகர்களின் ஃபேவரைட் ஆக  இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விஷாலுக்கு சரிசமமாக, இல்லையில்லை அதைவிட கொஞ்சம் அதிகமாகவே  கதாபாத்திரமும் நடிப்பதற்கான வாய்ப்புகளும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பது நிச்சயம் விஷாலின் பெருந்தன்மை தான். அந்த விஷாலின் பெருந்தன்மையை கொஞ்சம் கூட வீணாக்காமல் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்திலும்  தனது வித்தியாசமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புகளால் மிரட்டியுள்ளார் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக ‘என்னது’  என அவர் இழுத்து பேசும் வசனம் ஒவ்வொரு முறையும் தியேட்டர்களில் கைதட்டலை  பெறுகிறது.

இவர்களுக்கு ஈடு கொடுத்து தனது கதாபாத்திரத்தை வெளியே தெரிய வைத்திருக்கிறார் நடிகர் சுனில். வில்லன், காமெடியன் என இரண்டிற்குள்ளும் அடங்காமல் ஒரு புது பாணியில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சுனில்.  கதாநாயகியான ரித்து வர்மாவிற்கு மிகப்பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்தவரை சிறப்பித்துள்ளார். இன்னொரு கதாநாயகியான அபிநயா பிளாஷ்பேக் காட்சிகளில் வந்து போவதன் மூலமே  தனது இருப்பை  அழகாக தக்க வைத்திருக்கிறார். நகைச்சுவை நடிகர் ரெடின்  கிங்ஸ்லிக்கும்  தகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அவரும் ஓரளவு அதை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஒரு பக்கம் தாறுமாறு என்றால் பின்னணி இசையால் தொடர்ந்து  ஒருவித வைப்ரேஷனிலேயே படம் பார்க்கும் நம்மை  வைத்திருக்கிறார். அதேபோல காலத்துக்கு ஏற்ப மாறுபட்ட ஒளிப்பதிவை  வழங்கி அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம். இந்த இருவரையும் தாண்டி இந்த படத்திற்கான டைம் டிராவல் டெலிபோன் முதற்கொண்டு, மொத்த செட்டையும் வடிவமைத்த  கலை இயக்குனர் விஜய முருகனுக்கும்  மிகப்பெரிய பங்கு உண்டு.

படத்தின் ஆரம்பத்திலிருந்து  எந்த காட்சியையும் மிஸ் பண்ணாமல் பார்த்தால்  இந்த கதையை  குழப்பம் இல்லாமல் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களின் மனநிலையில் இருந்து  ரொம்பவே மெனக்கெட்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார். டைம் ட்ராவல் டெலிபோன் 90களின் காலத்து சில்க் ஸ்மிதா என படத்தில் பல சுவாரசியங்களையும் கொடுத்துள்ளார்.

டைம் டிராவல் கதை என்றாலே சுவாரஸ்யம் தான். ஏற்கனவே வந்த படங்களில் இருந்து மாறுபட்டு எப்படி ஒரு படத்தை கொடுக்க வேண்டுமோ அந்த அம்சங்களுடன் இந்த படத்தை கொடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். விஷாலுக்கு மட்டுமல்ல, ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இந்த படம் ஒரு கம்பேக்  ஆக அமைந்துவிட்டது, எஸ்.கே. சூர்யாவின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்றாக சேர்ந்து விட்டது,

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments