தமிழ் திரையுலகில் மூத்த இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன். விஜயகாந்த் நடித்த பல படங்களையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் படத்தையும் இயக்கிய பெருமைக்குரியவர். தனது மகன் விஜய்யை திரையுலகில் மிகப்பெரிய உயரத்திற்கு ஆளாக்கிய ஒரு பொறுப்பான தந்தையும் கூட. தற்போதும் படங்களை இயக்கியும் சில படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தும் வருகிறார் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்.
சமீப நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எஸ்.ஏ.சி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு சிறிய அறுவை சிகிச்சையும் முடித்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். விஜய்யும் அவரது தந்தையும் வசிப்பது தனித்தனி வீடுகளில் என்பதால் இருவருக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு காரணமாக சிறிய இடைவெளி விழுந்துவிட்டது போல வெளியுலகில் ஒரு தோற்றம் நிலவுகிறது.
குறிப்பாக விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு என்று அது சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அப்படியெல்லாம் தங்களுக்குள் எதுவும் இல்லை என உணர்த்துவது போல நடிகர் விஜய் வெளிநாட்டு பயணம் முடித்துவிட்டு திரும்பியதுமே தனது தந்தையின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்துள்ளார்.
இது குறித்து தனது பெற்றோருடன் அவர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.