கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிறு அன்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு திறந்தவெளி அரங்கில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற பெயரில் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அரங்கத்தில் எந்த அளவிற்கு பார்வையாளர்கள் அமர முடியுமோ, அதைவிட ஒரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்ததால் ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டியும் உட்கார இடம் இல்லாமலும் உள்ளே நுழைய முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கட்டுக்கடங்காத கூட்டம், போக்குவரத்து நெரிசல், சரியான பார்க்கிங் வசதி இல்லாதது உள்ளிட்ட அசௌகரியங்களும் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் மீது மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த பாதுகாப்பு குளறுபடி உள்ளிட்ட வசதிக் குறைவுகளுக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார் இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்தி இருவரும் ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து யுவன்சங்கர் ராஜா கூறும்போது, “இசை கலைஞர்கலாகிய நாங்கள் மேடையில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், ஏற்பாட்டாளர்களை முழுவதுமாக நம்பி அவர்கள் எங்களது ரசிகர்களை சரியாக கவனித்துக் கொள்வார்கள் என்கிற எண்ணத்தில் தான் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
தற்போது நடந்துள்ளது எதிர்பாராத ஒரு சம்பவம்.. இதற்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தான் பொறுப்பே தவிர ஏ..ஆர் ரகுமானை எந்த விதத்திலும் குறைசொல்ல முடியாது. இனிவரும் நாட்களில் இசைக்கலைஞர்களாகிய நாங்கள் இந்த விஷயங்களையும் சேர்த்து கவனிக்க வேண்டும் என்பதை ஒரு பாடமாக இதன மூலம் கற்றுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
அதேபோல் நடிகர் கார்த்தி கூறும்போது, “இந்த இசை நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். அருமையான இசை நிகழ்ச்சி. அதேசமயம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குளறுபடி காரணமாகத்தான் இது போன்ற அசவுரியங்கள் நடந்து விட்டன. ஏ.ஆர் ரகுமானை மூன்று தலைமுறையாக நாம் பார்த்து வருகிறோம். ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமே தனது குறிக்கோள் என்கிற ஒரு அன்பான மனிதததன்மை கொண்ட மனிதர் அவர்.. இந்த விஷயத்தில் அவரை குறை சொல்ல ஏதுமில்லை” என்று கூறியுள்ளார்