நடிகர் திலகம் படப்பிடிப்பில் டொவினோ தாமஸ் காலில் காயம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 2018 படத்தின் மிகப்பெரிய வெற்றியால் உற்சாகமாக இருப்பவர் அதில் ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ். தற்போது அஜயண்டே இரண்டாம் மோசனம், நடிகர் திலகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் பெரும்பாவூர் அருகில் உள்ள மாரம்பள்ளியில் நடைபெற்று வரும் நடிகர் திலகம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் டொவினோ தாமஸ். இந்த நிலையில் படப்பிடிப்பின்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வருகிறார் டொவினோ தாமஸ். அவர் குணமடைந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில தினங்கள் ஆகும் என்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ளது.
கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை வில்லன் நடிகர் லாலின் மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற டிரைவிங் லைசன்ஸ் படத்தின் இயக்குனருமான லால் ஜூனியர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாவனா கதாநாயகியாக நடிக்கிறார்.