லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜை பொருத்தவரை தனது படங்களில் பிரபல முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மாஸ் படமாக கொடுப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார்.
அப்படித்தான் விக்ரம் படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பஹத் பாசில், கிளைமாக்ஸில் யாரும் எதிர்பாராத விதமாக சூர்யா என பிரபல நட்சத்திரங்களை இணைத்து மிகப்பெரிய விருந்தாக ரசிகர்களுக்கு படைத்தார்.
அதேபோலத்தான் தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபல நடிகர்களை இணைத்துள்ளார். இந்த படத்தில் பஹத் பாசிலும் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல நடிகர் அர்ஜுன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதைப்படி சஞ்சய்தத், அர்ஜுன், விஜய் ஆகியோர்கள் சகோதரர்களாக நடித்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அர்ஜுனுக்கு பதிலாக முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷாலை தான் லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார்.
இதில் விஜய்யின் தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரிடம் பேசப்பட்டது. அதற்காக நான்கு மாதங்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் விஷால் தற்போது தான் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டு நடித்து வந்தார்.
அதனால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றுவது சிரமம் என்பதாலும் அவ்வளவு நாட்கள் கால்சீட் கொடுக்க முடியாது என்பதாலும் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவரால் ஏற்க முடியாமல் போனது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதற்குபிறகு தான் அந்த தம்பி கதாபாத்திரம் அண்ணனாக மாற்றப்பட்டு அதில் அர்ஜுன் நடித்துள்ளார்.