தமிழ்சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இயக்குனர் ராஜமவுலி அறிமுகமாகும் காலகட்டத்திற்கு பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நுழைந்து தென்னிந்திய அளவில் தனது வெற்றிக்கொடியை பறக்க விட்டவர் ஷங்கர். இவரது திறமையை கணித்து, தான் தயாரித்த ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை அளித்தவர் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.
அப்படி இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஜென்டில்மேன் படத்தில் இசையமைப்பதற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்தாராம் ஷங்கர். கே.டி குஞ்சுமோனும் இளையராஜாவின் தீவிர ரசிகர், பக்தர் என்றாலும் கூட வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை தான் அவர் தனது கொள்கையாக வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த சமயத்தில் ரோஜா படம் மூலம் கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக மாறிய ஏ.ஆர் ரகுமானை ஜென்டில்மேன் படத்திற்காக ஒப்பந்தம் செய்தார். அரைமனதாக ஷங்கர் ஒப்புக்கொண்டாலும் அந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகி படத்தில் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன.
இதனால் உற்சாகமான ஷங்கர் இளையராஜாவை மறந்து விட்டு தொடர்ந்து 30 வருடங்களாக தனது 90% படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானுடனே தான் இணைந்து பணியாற்றி வருகிறார். அவரது படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையும் பக்கபலமாக இருந்து வருகிறது.
தற்போது உருவாகி வரும் ஜென்டில்மேன்-II பட துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் இந்த சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டார்.