V4UMEDIA
HomeNewsKollywoodதலைவர் வருகைக்காக காத்திருக்கிறேன் ; ஜெயிலர் நன்றி அறிவிப்பு சந்திப்பில் நெல்சன் நெகிழ்ச்சி

தலைவர் வருகைக்காக காத்திருக்கிறேன் ; ஜெயிலர் நன்றி அறிவிப்பு சந்திப்பில் நெல்சன் நெகிழ்ச்சி

கோலமாவு கோகிலா என்கிற வெற்றிப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். இந்த இரண்டு படங்களின் வெற்றியால் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது. இதனால் தனது பயணத்தில் ஒரு சிறிய சறுக்கலை சந்தித்தார் நெல்சன்.

ஆனாலும் அதையெல்லாம் மனதில் வைக்காமல் தனது ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் தன்மீது வைத்த நம்பிக்கையை வீண் போகாமல் காப்பாற்றியுள்ளார் நெல்சன். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அந்த அளவிற்கு வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்ததற்காக பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஜெயிலர் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் நெல்சன் பேசும்போது, “இந்த வெற்றிக்கு காரணம் ரஜினி சாரின் பவர், ஆரா மற்றும் அவரது ரசிகர்கள் தான். ஒளிப்பதிவாளர். விஜய் கார்த்திக் கண்ணன் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார் இதற்காக ஏதோ சித்த வைத்தியம் பார்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரும் ரஜினி சாரின் ரசிகன் தான் என்றாலும் சில விஷயங்களை நம்புகிற மாதிரி இல்லை என்றால் அதை ஓபன் ஆக சொல்லிவிடுவார். இந்த படத்தில் அதிக நேரம் பணியாற்றியது என்றால் அது படத்தொகுப்பாளர் நிர்மலாகத்தான் இருக்கும். படம் ரிலீஸ் ஆகின்ற தினத்தில் கூட ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதேபோல கலை இயக்குனர் கிரண் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என கேட்டார். ஆனால் அவரின் முழு கவனத்தையும் செட்டின் மீது செலுத்துங்கள் என கூறிவிட்டேன். கோபத்தில் ஏதாவது குறை வைத்து விடுவாரோ என நினைத்தேன் ஆனால் அற்புதமாக தனது வேலையை பார்த்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்திலிருந்து ஸ்டன் சிவா மாஸ்டர் என்னை பாலோ செய்து வருகிறார். அதன்பிறகு தான் அவர் பணியாற்றிய படங்களை பார்த்தேன். உடனே ஜெயிலர் படத்தில் அவரை பணியாற்ற இணைத்துக்கொண்டேன். படப்பிடிப்பிற்கு அவர் மட்டுமல்ல அவரது இரண்டு பையன்களும் இணைந்து வந்து பணியாற்றினார்கள்.

ஜானி மாஸ்டருடன் நான்காவது முறையாக இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளேன். அவர் வடிவமைத்த காவாலா பாடல் படத்திற்கு மிகப்பெரிய புரமோஷன் ஆக அமைந்தது. நடிகர் சுனில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஒப்புக்கொண்டு நடித்ததுடன் சிறப்பாக நடித்தாலும் கூட இன்னொரு முறை டேக் போலாகலாமா என ஆர்வமுடன் கேட்பார். எனக்காக ஒரு டேக்கும் அவருக்காக ஒரு டேக்கும் கூட சில நேரங்களில் எடுத்துக் கொண்டு அவற்றில் எது சிறப்பாக இருந்ததோ அதை பயன்படுத்தினோம்.

இந்த படத்தில் மிர்னா நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக முதலில் ஐந்து ஆறு பேரிடம் பேசினோம். ஆனால் மிர்னாவின் நடிப்பை பார்த்ததும் வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய யோசிக்கவில்லை. இந்தப்படத்தில் குறைந்த டேக் வாங்கி நடித்தவர்களில் மிர்னாவும் ஒருவர்.  இந்த படத்திற்காக ஹுக்கூம் பாடல் எழுதப்பட்டு என்னிடம் வந்த போது இதை எழுதியவர் யாரோ ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தானே என்று அனிருத்திடம் கேட்டேன். அந்த அளவிற்கு ஒரு அதிரடி பாடலாக இதை உருவாக்கி இருந்தார்.

என்னுடைய முதல் படத்திலிருந்து இடம் பிடித்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. அவர் வரவில்லை என்று கூறினாலும் ஓல்டு சென்டிமென்ட் பேசி பிளாக்மெயில் செய்து வர வைப்பேன். ஆனால் படத்திற்குள் வந்த பிறகு நம்மை அவர் பிளாக்மெயில் செய்வார். கதை விவாதங்களில் கூட வந்து கலந்து கொள்வார். ஆனால் தேவையில்லாமல் ஏதாவது சொல்லி கோபித்துக் கொண்டு செல்வார்.

சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பு பொறுப்புகளை கண்ணன் மற்றும் செம்பியன் இருவருமே எடுத்துக் கொண்டார்கள். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார். இந்த படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி மாறன்.

இந்த படத்தை ரசிகர்கள் இவ்வளவு கொண்டாட காரணம் ரஜினி சார் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார். படம் பார்த்துவிட்டு, நான் நினைத்ததை விட பத்து மடங்கு நல்லா வந்திருக்கு என்று பாராட்டினார். நிறைய பேர் என்னை சந்தேகமாக பார்த்தபோது ரஜினி சார் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். இந்த படம் இங்கே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இப்போது இமயமலையில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “இந்த படத்தில் ரஜினி சாரின் கண்களை அதிகளவு குளோசப் காட்சிகளில் பயன்படுத்தி இருந்தோம். அதற்கு காரணம் எப்போதுமே அவர் நம்மை நோக்கி பார்க்கும்போது அவரது கண்களின் பார்வை தீர்க்கமாக இருக்கும்.. நான் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும் இதை என்னிடம் கூறி ரஜினி சாரின் கண்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வைக்க விரும்பினார். படத்தில் அந்த காட்சிகளை பின்னணி இசையுடன் பார்க்கும்போது மாஸாக இருந்தது” என்று கூறினார்.

Most Popular

Recent Comments