V4UMEDIA
HomeNewsKollywoodகும்பாரி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

கும்பாரி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் T.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன், சரவண சக்தி நடிகர்கள் அப்புக்குட்டி. ஜீவா, ரோபோ சங்கர், பிரஜன், ஜெயிலர் கலையரசன், ராட்சசன் சரவணன் மற்றும் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசும்போது, “இந்த படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறார்கள் என்பது படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. சிறிய படமாக இருந்தாலும் நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்தால் வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, “கும்பாரி என்பதன் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. இங்கே வந்த பிறகுதான் கும்பாரி என்றால் நட்பு என அர்த்தம் இருப்பது தெரியவந்தது. மற்ற எந்த உறவுகளும் பந்தத்தோடு தொடர்பு கொண்டது. நட்பு மட்டும்தான் எந்தவித பந்தமும் இல்லாமல் வரக்கூடியது’ என்று கூறினார்.

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும்போது, “இந்த படத்தின் பாடல்களை பார்த்துவிட்டு பிறகு ட்ரெய்லரை பார்க்கும்போது ஒவ்வொரு காட்சியையும் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது. இந்த படத்தின் நாயகன் விஜய் விஷ்வா மட்டுமல்லாமல் இனிகோ பிரபாகர், சௌந்தரராஜன் என எல்லோருமே என்னுடன் அடிக்கடி விவாதத்தில் இருப்பவர்கள்தான். இவர்கள் போன்ற இளம் நடிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்களை தேடி வரும் வாய்ப்பை தயவுசெய்து மிஸ் பண்ணாதீர்கள். உங்கள் முகத்தை மக்களிடம் பதிவு செய்து கொண்டே இருந்தால்தான் மக்கள் உங்களை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நடிகர் விக்ரம் 16 வருட போராட்டத்திற்கு பிறகு தான் சேது என்கிற படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார். உங்களுக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு சேது திரைப்படம் அமையும். இதுபோன்று இசை வெளியீட்டு விழாவிற்கு வருபவர்கள் இசை தொடர்பாகவும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டுமே பேசினால் அந்த கலைஞர்களை பற்றி வெளியே தெரியும். அதை தவிர்த்து சமூக நீதி போராளிகளாக பொதுவுடமை சிந்தனை கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்வதற்கு சிலபேர் இது போன்ற விழாக்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கு வேறு மேடைகள் இருக்கின்றன.. அங்கே உங்களுடைய சமூக நீதி கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

நாயகன் விஜய் விஷ்வா பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் எப்போது யாரிடம் பேசினாலும்  சாப்பிட்டீர்களா என்று தான் முதலில் கேட்பார். அந்த அளவிற்கு எல்லோரையும் அன்புடன் கவனித்துக் கொண்டார். இந்த படத்தின் கதை கடலும் கடல் சார்ந்தும் உருவாகியுள்ளது. 25 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரொம்ப வேகமாகவே முடித்து விட்டோம். படத்தின் தயாரிப்பாளர் பட்ஜெட் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆரம்பத்திலேயே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது தரைப்படை, பிளாஷ்பேக், பிரம்ம முகூர்த்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். வாய்ப்புகள் நன்றாகவே கிடைக்கிறது. ஆனால் இதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயமும் இருக்கிறது” என்று கூறினார்.

இன்னொரு நாயகனாக நடித்துள்ள நலீம் ஜியா பேசும்போது, “சினிமாவில் எனக்கு இது முதல் படம். இதற்கு முன்பு மலையாளத்தில் ஆசியா நெட் சேனலில் ஒரு சீரியலில் கிட்டத்தட்ட 920 எபிசோடுகள் கதாநாயகனாக நடித்துள்ளேன். சினிமா எப்படித இருக்கும் என்கிற ஆர்வத்தில் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நினைத்து வந்ததைவிட இங்கே சினிமா இன்னும் பயங்கரமாக இருக்கிறது” என்று கூறினார்.

Most Popular

Recent Comments