சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்திலும் மொய்தீன் பாய் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்த படம் கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியலை மையப்படுத்தி உருவாக்கி உள்ளது. இதில் நிஜமாகவே நன்கு கிரிக்கெட் விளையாடக் கூடிய விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை துவங்கியது.
அதன்பிறகு மும்பை, சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதியாக திருவண்ணாமலையிலேயே நிறைவு பெற்றது.
இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “கடந்த நான்கு மாதங்களாக எங்கள் குழுவினர் கடுமையாக உழைத்து இந்த படப்பிடிப்பை முடித்துள்ளோம். கடைசி 22 மணி நேரம் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தினோம். லால் சலாம் குடும்பத்திற்கு மிக்க நன்றி. திருவண்ணாமலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி அதே இடத்தில் முடித்துள்ளோம். இது தற்செயலாக நடந்த நிகழ்வாக இருக்க முடியாது. உங்கள் அனைவரது ஆசியால் தான் அடுத்து லால் சலாம் படத்தின் இறுதிக்கட்டப் பணிக்கு செல்ல போகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் நடிகை ஜீவிதா, நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது
















