தெலுங்கில் தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அரசியலில் நுழைந்த அவர் அதன்பிறகு தனக்கு அரசியல் செட்டாகாது என உணர்ந்து மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார். அப்படி ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அவர் நடித்த படம் கைதி நம்பர் 150. இந்த படம் தமிழில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமாக கத்தியின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி சிரஞ்சீவியின் ரீ என்ட்ரிக்கு விஜய் படம் வெற்றிகரமான வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து சில ரீமேக் படங்களிலும் சில ஒரிஜினல் கதைகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் நடிகர் சிரஞ்சீவி.
அந்த வகையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி உள்ள போலா சங்கர் என்கிற படத்தில் நடித்துள்ளார் சிரஞ்சீவி. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மீண்டும் எதற்காக ஒரு ரீமேக் படத்தில் நடிக்கிறேன் என்றும் குறிப்பாக இந்த வேதாளம் படத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்றும் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று குறிப்பிட்டார் நடிகர் சிரஞ்சீவி.
இது பற்றி அவர் கூறும்போது, “ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்றால் அந்தப் படத்தின் கன்டென்ட் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நடிப்பதில் தவறில்லை. வேதாளம் படத்தின் கதை அந்த அளவிற்கு இருக்கிறது. அதை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற விரும்பினேன்.
அது மட்டுமல்ல வேதாளம் படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் இல்லை.. இன்னும் பல ரசிகர்கள் அந்த படத்தை பார்க்கவே இல்லை.. எனவே தான் வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடித்தேன்” என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.