பெரும்பாலும் ஹிட்டான பாடல்களில் இருந்து அதன் துவக்க வரியாக இருந்தாலும் அல்லது இடையில் வரும் கவனம் ஈர்க்கும் வரியாக இருந்தாலும் அவற்றை தங்களது படங்களுக்கு பாடல் தலைப்புகளாக வைக்கும் ட்ரெண்ட் இப்போதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற முஸ்தபா என்கிற ஹிட் பாடலில் இடையே வரும் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற வரிகளையே டைட்டில் ஆக்கி ஒரு படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் ஆர்ஜே விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். விடுதலை புகழ் பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் குமரவேல், இர்பான் ஆகியோர் நடித்துள்ளனர்.

மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்த படத்தை சமீப நாட்களாக வித்தியாசமான முறையில் புரமோட் செய்து வருகிறார்கள் படக்குழுவினர்.

குறிப்பாக நண்பர்கள் வாரத்தை முன்னிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நட்பின் பெருமையை உணர்த்தும் விதமாக வெளியான சுப்பிரமணியபுரம், பாய்ஸ், பஞ்சதந்திரம், என்றென்றும் புன்னகை, சென்னை 28 என நண்பர்கள் சம்பந்தப்பட்ட பட போஸ்டர்களை போல தங்களது பட போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆகியும் வெளியாவதற்கு தாமதமாகி வந்த நிலையில் தொடர்ந்து நட்பை பற்றி படம் எடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை வெளியிடுவதாக ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.