சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியது.
குறிப்பாக இந்த படத்தில் இருந்து வெளியான முதல் லிரிக் பாடலான காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி இளைஞர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது. ஆறிலிருந்து அறுபது வரை உள்ளவர்கள் இந்த பாடலுக்கு ரிலீஸ் வீடியோ போட்டு தங்களையும் ஒரு தமன்னாவாகவே மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
பொதுவாகவே நெல்சன் படங்களின் பின்னணியில் தூணாக நின்று வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இதுவரை நெல்சன் இயக்கத்தில் வெளியான மூன்று படங்களிலும் ஏதாவது ஒரு பாடல் இதே போல பட்டைய கிளப்பும் பாடலாக அமைந்துவிட்டது.
அந்த வகையில் இந்த ஜெயிலர் படத்திலும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்று அடைந்துள்ளது. இந்த பாடல் வெளியாகி நான்கு வாரம் கூட முடிவடையாத நிலையில் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்கள் என்கிற புதிய சாதனையை செய்துள்ளது.
அதுவும் மிகக் குறுகிய காலத்திலேயே இந்த பாடல் இந்த சாதனையை படைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் 2023ல் வெளியான பாடல்களில் முதல் முறையாக அதிவேகமாக 100 மில்லியன் சாதனையை படைத்த பாடல் இதுவாகத்தான் இருக்கும்.