சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் கூட அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் வெவ்வேறு விதத்தில் ஊடுருவி வருகிறது. தொலைக்காட்சிகளில் அடிக்கடி அந்த படம் ஒளிபரப்பாகி வருகிறது.
இது தவிர கன்னடத்தில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழிலும் சந்திரமுகி 2 படத்தை கடந்த வருடம் அறிவித்த இயக்குனர் பி.வாசு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அவரது சிஷ்யன் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் வடிவேலு, ராதிகா, சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் மரகதமணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டமாக ரிலீசாக இருக்கிறது கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது இந்த நிலையில் தற்போது மீதம் இருக்கும் ஒரே ஒரு பாடலை படமாக்குவதைக்காக ஜார்ஜியாவுக்கு கிளம்பிச் சென்றுள்ளது சந்திரமுகி 2 படக்குழு. இந்த பாடலில் நடிகை மஹிமா நம்பியாரும் பங்கேற்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சந்திரமுகி படத்தின் இறுதி பாடலை படமாக்க ஜார்ஜியாவுக்கு கிளம்புகிறோம். என்னை போன்ற ஒரு நடிகைக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் ஒரு பாடலில், அதிலும் அவருடனே இணைந்து பங்கேற்பது என்பது கனவு நனவான தருணம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மஹிமா நம்பியார்