நடிகர் சந்தானம் திரையுலகில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். அவர் பிரபல ஹீரோக்களுடன் இணைந்து நடித்த படங்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்படும் விதமாக இருக்கின்றன. அதன்பிறகு கடந்த சில வருடங்களாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார் சந்தானம்.
அதில் சில படங்கள் தவிர மற்ற படங்களில் வழக்கமான சந்தானத்தையும் அவரது காமெடியையும் பார்த்து ரசிக்க முடியவில்லை என்கிற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அதே சமயம் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ஆகிய ஹாரர் காமெடி படங்கள் சந்தானத்திற்கு கை கொடுத்தன.
அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களில் வெளியான படங்கள் சந்தானத்திற்கு கைகொடுக்காத நிலையில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சந்தானத்தின் ஹீரோ அந்தஸ்த்தை தக்க வைக்க உதவியுள்ளது.
இதற்கு முன்பாகவே கன்னட இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வந்த கிக் திரைப்படம் தயாராகியும் கூட ரிலீஸுக்காக காத்திருந்தது. தற்போது டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு கிடைத்த வெற்றியால் உடனடியாக கிக் படத்தையும் சூட்டோடு சூட்டாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார்கள்.
வரும் அக்டோபர் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்று அறிவிப்பும் செய்து விட்டார்கள். இதுவும் டிடி ரிட்டன்ஸ் போல சந்தானத்திற்கு மிகப்பெரிய இன்னொரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.