நடிகர் கமல்ஹாசன் கடந்த 30 வருடங்களில் நடித்த படங்களில், தான் ஏற்று நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கும் அதற்கான கெட்டப்பிற்கும் மிகப்பெரிய அளவில் மெனக்கெடுவார். வெளிநாட்டு திரைப்படங்களில் பயன்படுத்தும் டெக்னாலஜியை முன்கூட்டியே இந்திய சினிமாவுக்கு குறிப்பாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் முதல் நபராக எப்போதுமே நடிகர் கமல் இருந்து வருகிறார்.
அந்த வகையில் இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தா கதாபாத்திரமாகட்டும் அதன்பிறகு அவ்வை சண்முகி, தசாவதாரம் என தனது படங்களில் எல்லாம் வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருந்தார் கமல்.
இதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் ஒப்பனை கலைஞரான மைக் வெஸ்ட்மோருடன் கைகோர்த்து பணியாற்றி வந்தார். இந்த படங்களில் எல்லாமே கமல்ஹாசனின் கதாபாத்திர தோற்றங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் பாராட்டுக்களையும் பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் கல்கி படத்தின் டைட்டில் துவக்க விழாவிற்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் கமல் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்று அங்கே தனது ஆஸ்தான ஒப்பனை கலைஞரான மைக் வெஸ்ட்மோரை நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.