தனுஷ் நடிப்பில் வாத்தி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இன்று (ஜூலை 28) நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இந்தப் படம் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நடைபெறுவதாக உருவாகி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் டீசர் அதை உறுதிப்படுத்தி உள்ளது. தொடர் துப்பாக்கி சத்தங்கள், பீரங்கிகள் என ஒரு ராணுவ படம் பார்க்கும் உணர்வை இந்த டீசர் தருகிறது.
கதாநாயகி பிரியங்கா மோகன் கூட துப்பாக்கியை தூக்கி சுட துவங்கியுள்ளார். அந்த வகையில் படத்தின் டீசரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் கூடவே அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.